நெடுந்தீவிலுள்ள குதிரைகள்


யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வடமேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவாக உள்ளதும், ஆழ்ந்த அலை கடல்களின் மத்தியில் முத்தாக முகிழ்ந்திருப்பதே நெடுந்தீவாகும். இங்கு வரலாற்றுக்காலம் தொட்டு ஐரோப்பிய காலனித்துவத்தை அடையாளப்படுத்தும் பல மரபுரிமைச் சின்னங்களினைக் கொண்ட தீவாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் நெடுந்தீவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் சான்றுகளை வெளிப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இக் குதிரைகள் இன்றும் ஒல்லாந்தர்களின் ஆட்சி நெடுந்தீவில் நிலவியதையே புலப்படுத்துவதாக உள்ளது. நெடுந்தீவுக்கு குதிரைகள் ஒல்லாந்தராட்சி இங்கு நடைபெற முன்னரே வடஇலங்கையுடன்  

வர்த்தக நடவடிக்கையினை மேற்கொண்ட அரேபியர்கள் இங்கு தங்கியிருந்த போது முதன் முதலாகக் கொண்டுவரப்பட்டது என்ற கருத்தும் இத்தீவு மக்களிடையே காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தென்னிந்தியாவில்  மணிவாசகரின் காலத்தில் அவர் குதிரை வாங்கவந்த இடம் இவ்நெடுந்தீவிலுள்ள பெரியதுறை என்ற கருத்தும் இன்று நிலவுகின்றது. ஏனெனில் நெடுந்தீவு தமிழக இராமேஸ்வரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதனால் நெடுந்தீவிற்கும் தமிழகத்திற்கும் சங்ககாலத்திலிருந்து தொடர்பிருந்ததாக சான்றுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமன்றி பெரியதுறைக்கருகில் சோழர்கால சிவன்கோயிலும் சோழ மன்னரது நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இத்தீவிலுள்ள பெரியதுறையே மணிவாசகர் காலத்தில் திருப்பெருந்துறை என அழைக்கப்பட்டு இன்று பெரியதுறையாக மருவியுள்ளதென்ற நம்பிக்கை நிலவுகின்றது.

நெடுந்தீவில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி 1697இல் ஒன்று முதல் இரண்டரை வயதுள்ள குதிரைக் குட்டிகள் இங்கு வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஒல்லாந்தர் காலத்தில் சிறப்பாகக் குதிரைகள் வர்த்தகத்திற்காகவும்,  போக்குவரத்திற்காகவும் யாவா, பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததோடு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் ஒல்லாந்தர் காலத்தில் குதிரைகள் அதிகம் நெடுந்தீவில் வளர்க்கப்பட்டது. இதனால் இத்தீவில் குதிரைக்காக குதிரை லாயங்கள், குதிரைக்கான மூலிகை மருத்துவக்கேணி, பெருக்குமரம் போன்றன ஒல்லாந்தரால் குதிரைகளுக்காக அமைக்கப்பட்டன. நெடுந்தீவானது இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட குதிரைகள் வாழ்வதற்கான சூழலையும் கொண்டிருந்தது. இதன் விளைவு நெடுந்தீவில் குதிரைகள் ஒல்லாந்தரினால் அதிகம் வளர்க்கப்பட்டு அவர்களின் மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக விளங்கியதோடு நெடுந்தீவின் சின்னமாகவும் அடையாளமாகவும் விளங்குகின்றது.
ஒல்லாந்தரது ஆட்சியைத் தொடர்ந்து நெடுந்தீவைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள்  ஒல்லாந்தரால் கைவிடப்பட்ட குதிரைகளை பராமரிப்பதற்காக ஒன்டர், கூப்மன் போன்ற  பதவிகளில் அதிகாரிகளை நியமித்தினர். குறிப்பாக கி.பி 1798இல் குதிரை வண்டிக்கான பொறுப்பு வருமான அதிகாரியான பார்புற் என்பவரிடமும், 1816இல் சன்கோணி குதிரை வளர்ப்பதற்காகவும், 1826இல் அதேட்டன் என்பவரிடம் வழங்கப்பட்டதாக ஆங்கிலேயரது குறிப்புக்களில் காணப்படுகின்றன. எனினும், பிரித்தானியராட்சி முடிவுற்றதும் குதிரை வளர்ப்பும் கைவிடப்பட்டு இன்றுபோல் பரந்த பற்றைக்காடுகளிலும் புல்வெளிகளிலும் வளரத்தொடங்கின. 
சமகாலத்தில் நெடுந்தீவின் பிரதேச செயலகத்தின் கொடியிலும் நகர வளைவிலும் குதிரைச் சின்னம் இடம்பெற்றிருப்பதானது நெடுந்தீவின் முக்கிய மரபுரிமையம்சமாகவும், அரசாங்கத்தின் சொத்தாகவும் மாற்றப்பட்டுள்ளமை புலனாகின்றது. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் முதன்முதலாக  பிரகடனப்படுத்தப்பட்ட குதிரைகள் சரணாலயம் அமைக்கப்பட்ட பெருமைக்குரிய பிரதேசமாக நெடுந்தீவு விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும.; ஒல்லாந்தராட்சியில் பெரிய குதிரைகளே கொண்டுவரப்பட்டது. காலம் செல்லச்செல்ல இங்கு தரைத்தோற்றம் மற்றும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் குதிரைகளிலும் தாக்கத்தை செலுத்தியது. இதனால் உருவம் சிறுத்து போனீஸ் என்றும் சிறப்பாக அழைக்கப்படும் குதிரை இனங்களே இன்று இத்தீவெங்கும் உள்ளது. பிரித்தானியர் காலத்தில் அரேபியா, பேர்சியா முதலிய நாடுகளிலிருந்து குதிரை முகவர் நிலையங்கள் மூலம் இத்தீவிற்குக் கொண்டுவரப்பட்டு குதிரைப் பந்தயங்கள் நடாத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று நெடுந்தீவில் 1500 இற்கும் 1750 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான குதிரைகள் வெல்லைவெளி கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளிலும் குடிமனைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்குள்ள குதிரைகனை இத்தீவை விட்டு எங்கேயும் கொண்டுசெல்லமுடியாது. அவ்வாறு கொண்டு செல்வதென்றால் யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அனுமதியினைப் பெற்று கொண்டுசெல்லலாம். எனினும் தகுந்த காரணமின்றி அனுமதி வழங்கப்படுவதில்லை. நெடுந்தீவின் சொத்தாக போற்றப்படுகின்ற குதிரைகளை நெடுந்தீவு மக்களில் சிலர் தமக்குச் சொந்தமாகத் தங்களது பெயர்க் குறிகளைக் குதிரைகளில் பொறித்து வளர்த்து வருகின்றனர். அத்துடன் காடுகளில் கட்டாக்காலி மாடுகளைப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர். இங்கு ஆண்டு தோறும் குதிரைப்பந்தயப் போட்டிகளையும் நெடுந்தீவு மக்கள் நடாத்திவருவதைறும் காணலாம்.

பொ.வருண்ராஜ்
உதவி விரிவுரையாளர்(தற்காலிகம்)
தொல்லியல் பாட அலகு
யாழ் பல்கலைக்கழகம்
varunpons@yahoo.com



Comments

Popular posts from this blog

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)

குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)