நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)



போர்த்துக்கேயர் நெடுந்தீவைக் கைப்பற்றியதும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கேந்திர ஸ்தானமாக விளங்கியமையாலும் தமது பாதுகாப்பை மற்றும் கடல் போக்குவரத்துக்களைக் கண் காணிப்பதற்கும், தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் கோட்டையை அமைத்தனர். இவ்வாறாக அமைக்கப்பட்ட கோட்டைகளில் இன்றும் போர்த்துக்கேயரது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வது நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு அண்மையில் கடற்கரைப் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். இக்கோட்டை ஒல்லாந்தர்களினது என்றும் கூறப்படுகிறது. எனினும், ஒல்லாந்தர்கள் இங்கு கோட்டை கட்டியதற்கான ஆதாரங்கள் ஒல்லாந்தர்களது ஆவணங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   மேலும், நெடுந்தீவு மக்களிடையே ஐதீகக் கதையாக நம்பப்படும் வெடியரசன் வரலாற்றுடன் தொடர்புடைய படையெடுப்பாளரான மீகாமன் கட்டிய கோட்டையே இது என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. எனினும், நெடுந்தீவின் கடற் கரையில் போர்த்துக்கேயர் காலத்தில் டிடழஉம hழரளந இருந்ததற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றது. எனவே, இதுதான் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாக இருக்கலாம்.

இக்கோட்டை தொடர்பாக பசெற் என்பவர் தனது விசித்திரமான இலங்கை என்ற குறிப்பில் நெடுந்தீவில் போர்த்துக்கேயரது கோட்டை மிகப்பலமான பாதுகாப்புடைய இரண்டுமாடி வசிப்பிடம் மற்றும் ஐம்பது யார் சதுரப்பரப்பளவையும் தடிப்பான சுவர்களையும் கொண்டதெனவும் இச்சுவர் முற்றுமுழுதாக நிலமட்டத்திலிருந்து இரண்டாகப் பிரிவதுடன் இதனுடன் தொடர்பு கொள்வதற்கு முதலாம் மாடியுடன் காணப்படுகின்ற படியும் காணப்படுகின்றது எனக்குறிப்பிடுகின்றார். மேலும், இக்கோட்டை அக்காலத்தில் ஒரு முன்னேற்பாடான பாதுகாப்பு அமைப்பாகும். நீளமான, ஒடுங்கிய, சிறிய அறைகளைக் கொண்டதாகவும் கைமரக்குற்றிகளிலிருந்து இதன் கட்டுமானத்தைப் பார்க்கும் போது மேலே செல்லும் படிக்கட்டுக்கள் சுவர்களில் அமைந்துள்ளது. ஒருமூலையில் இருட்டறை ஒன்றுமுள்ளதோடு இரண்டடி சதுரமுள்ள யன்னலொன்று மாத்திரம் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

இக்கோட்டை தொடர்பாகப் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிடும்போது ஒல்லாந்தர்களது கோட்டைகளிலே பஸ்ரியன்(Bastion), சுடுதளம்(Gun-point) போன்ற அமைப்புக்கள் வழமையாகக் காணப்படும். ஆனால், இக்கோட்டையில் இவ்வம்சம் இல்லை. பொதுவாக ஒல்லாந்து கோட்டையின் சுவர்களின் வெளிப்புறம் சாய்வாகவும், உயரமும், அடர்த்தியாகவும் காணப்படும். இக்கோட்டையில் அப்படியானதன்மை ஓரளவிருந்தாலும் இக்கோட்டை போர்த்துக்கேயர் காலக் கோட்டை எனக்கூறுவதே பொருத்தமாகுமெனக் கூறுகின்றார்.

மேலும், நெடுந்தீவு போர்த்துக்கேயரின் முக்கியத்துவம் மிக்க பகுதியாக விளங்கிமையாலும் அக்காலத்தில் பெரியதுறை துறைமுகமாகவும் விளங்கியபோது இந்த துறைமுகத்திற்கு அண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து அதிகாரங்களைச் செலுத்தியதான குறிப்புக்கள் காணப்படுகின்ற போதும் அங்கு கோட்டையிருந்தமைக்கான சான்றுகள் காணப்படவில்லை. எனவே இன்று நெடுந்தீவு மத்தியில் இடிந்தநிலையில் காணப்படும் இக்கோட்டையே போர்த்துக்கேயரது கோட்டையாக இருந்திருக்கலாம். இந்தக் கோட்டையையே போர்த்துக்கேயருக்குப் பின்னர் நெடுந்தீவைக் கைப்பற்றி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாக மாற்றிய ஒல்லாந்தர் தமது நிர்வாக வசதிக்காக மாற்றிமையத்திருக்கலாம். உதாரணமாக, யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்துறைக் கோட்டை, முதலியவற்றைக் கட்டியவர்கள் போர்த்துக்கேயரே! எனினும், பின்னர் அவற்றை ஒல்லாந்துக் கலைமரபிற்கு ஏற்றதாக மாற்றியமைத்தமையால் தான் ஒல்லாந்தர்களது கோட்டையென அழைக்கப்பட்டது. அவ்வாறே இக்கோட்டையும் பிற்காலத்தில் ஒல்லாந்தர்கள் தமது அமைப்புக்கேற்ப மாற்றியிருக்கலாமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

Comments

Popular posts from this blog

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)