புறாக்கூடு


நெடுந்தீவில் ஒல்லாந்தரது ஆட்சியைச் சிறப்பாக அடையாளப்படுத்தும் ஐரோப்பியர்கால மரபுரிமைச்சின்னங்களில் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது பறவைகள் சரணாலயம் எனப்படும் புறாக்கூடு ஆகும். இவ்வமைப்பானது ஒல்லாந்தராட்சி நடைபெற்ற இலங்கையில் அவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்டட அமைப்புக்களில் நெடுந்தீவைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தான் ஒல்லாந்தர்களின் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த மையங்களில் நெடுந்தீவானது நிர்வாகம், இராணுவக்கட்டமைப்பு போன்ற விடயங்களைப் பற்றி ஏனைய பிரதேசங்ககளுடன் தொடர்பு கொள்வதற்கான மையமாக இது விளங்கியதென்பதனையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 
அந்தவகையில் இப்புறாக்கூடானது நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதான கட்டடத்துக்குத் தெற்கே மிகக்கிட்டிய தொலைவில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் குறிப்பாக கி.பி 1602 தொடக்கம் கி.பி 1796 இற்கிடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. இது கூழாங்கற்களையும், முருகைக்கல்லையும், சுதையையும், மரத்தையும் பயன்படுத்தி அமைக்கப்பட்டவையாகும். இக்கூடு காணப்படும் பிரதேசம் ஐரோப்பியர் காலத்தில் நிர்வாக, இராணுவ ரீதியில் முக்கியம் பெற்றதாகக் காணப்படுகிறது. ஆதிகாலத்தில் தகவல்தொடர்பாடலுக்குப் புறாக்களும் பயன்படுத்தப்பட்ட வரலாறுகளுண்டு. அம்மரபு ஒல்லாந்தர் காலத்திலும் பின்பற்றப்பட்டமைக்கு இங்குள்ள புறாக்கூடு சான்றாகும். இதனை அமைத்த ஒல்லாந்தரது கலைமரபையும், தொழில்நுட்ப அறிவையும், அதனமைப்பையும் நோக்கும் போது இக்கூடு புறாக்கள் வாழ்வதற்கேற்றதாக உள்ளதால்  புறாக்கூடு என அழைக்கப்படுகிறது. இக்கூடு ஏறத்தாள 15 அடி உயரம் கொண்டது. இக்கட்டடத்தின் மேற்தளத்தில் புறாக்கள் அல்லது பறவைகள் வசிப்பதற்குரிய 80 சிறிய அறைகள் கொண்ட கூடுகள் அல்லது கண்துளைகள் காணப்படுகின்றன.
இந்த வகையில் ஒல்லாந்தராட்சியிலும், ஆங்கிலேயராட்சியிலும் தெற்காசியாவின் நிர்வாகத்தின் முக்கியம்பெற்ற மையங்களாக நாகபட்டனம், சென்னை, கோவை போன்றன திகழ்ந்தன. எனாவே இந்நகரங்களுக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான நிர்வாகம், இராணுவ செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் புறாக்கள் மூலம் பரிமாறியிருக்கலாம். இக்கூடு ஐரோப்பியர்காலத்தில் இராணுவ, நிர்வாக இரகசியங்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் இத்தீவு மையமாகக் காணப்பட்டதென்ற வரலாறு அங்குள்ள மக்கள் மத்தியில் இன்னும் நிலவுகின்றது. அதுமட்டுமன்றி இன்றும் இக்கூடுகளில் இடம்விட்டு இடம்மாறும் புறாக்கள் தங்கிச்செல்வதையும் காணலாம். எனவே இப் புறாக்கூடானது ஒல்லாந்தராட்சியில் அயல் பிரதேசங்களுடன் தமது இராணுவ, நிர்வாக தேவைகளுக்காக அமைக்கப்பட்டு பின்னர் பிரித்தானியரால் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு இன்று கைவிடப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளை வியப்பிற்குரியதாகவும், ரசித்துப்பார்க்கவும் தூண்டுவதாகக் காணப்படுகிறது. எது எப்படியோ இலங்கையில் ஒல்லாந்தர் கால மரபுரிமைச் சின்னங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இப்புறாக்கூடு நெடுந்தீவில் மட்டும் அமைந்திருந்து ஆய்வாளர்களைப் பல்வேறு வகையிலும் சிந்திக்கத் தூண்டிய வண்ணம் உள்ளது.

Comments

Popular posts from this blog

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)

குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)