குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இலங்கையானது இந்தியாவுடனும் கிரேக்கம்> ரோம்> அராபியா> மற்றும் தென் கிழக்காசியா> கிழக்காசியா போன்ற நாடுகளுடனும்  கொண்ட உறவின் காரணமாக கடல் வழித் தொடர்புகளும் வர்த்தகப் பண்பாட்டு உறவுகளும் அதிகரிக்கலாயின. இத்தொடர்புகளை பாளி> சிங்கள> தமிழ் இலக்கியங்களும் பிறநாட்டார் குறிப்புக்களும்> கடற்கரை நகரங்கள்> வர்த்தக மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்சான்றுகளும் ஆதாரப்படுத்துகின்றன. அக்காலத்தில் கடல்வழித் தொடர்புகளைப் பேணவும் கடல்கடந்த வணிகத்தில் ஈடுபடுவதற்கும் படகு> தோணி> பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இவை திசைமாறாது குறிப்பிட்ட இடத்தை அடைவதற்காகத் துறைமுகத்தின் ஓர் குறிகாட்டியாக வெளிச்சவீடு காணப்படுகிறது.
இவ்வகையில் கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றல், வர்த்தகம் போன்ற நடவடிக்கைளுக்காக கி.பி 16ஆம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பியராட்சி இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதனால் நீண்ட பாரம்பரிய மக்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கிய நெடுந்தீவும் ஐரோப்பியராட்சிக்குட்பட்டது. இவ்வாட்சியாளர்களில்  ஒல்லாந்தர்களே  அதிகளவான வெளிச்சவீடுகளை இலங்கையில் அமைத்தனர். அவற்றில் இன்றும் அழிவடையாது ஒல்லாந்தர் காலத் தொழில்நுட்பத்தைப் பறைசாற்றுவதாக நெடுந்தீவின் தென்மேற்குப் பகுதியிலமைக்கப்பட்ட குவிந்தா அல்லது குயின்ஸ் ரவர் என அழைக்கப்படுகின்ற வெளிச்சவீடு காணப்படுகிறது. இக்குவிந்தா ஒல்லாந்தர் கால ஆட்சியின் சின்னமாகவே அமைந்துள்ளது. இவ் வெளிச்சவீடு காணப்படும் பகுதி ஒல்லாந்தர் காலத்தில் பாரிய துறைமுகமாகக் காணப்பட்டதென தொல்லியலாளர்கள் எடுத்துரைக்கின்றனர். அதுமட்டுமன்றி அங்குள்ள மக்கள் இப்பகுதி ஆழம் குறைந்த முருகைக் கற்பாறை கடற்கரையாதலால் இது துறைமுகமெனவும் இது நெடுந்தீவின் வருகையையும்> பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். எது எவ்வாறெனினும் வெளிச்சவீடானது  பொதுவாகவே துறைமுகத்தை அடையாளப்படுத்தி கப்பல் கரைசேர்வதற்காக அமைக்கப்படுவதாகும். எனவே இக் குயின்ஸ் ரவர் காணப்படும் பகுதி ஒல்லாந்தர் காலத்தில் மிகப்பெரிய துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் அல்லது இதனருகில் ஏதாவதொரு துறைமுகம் கட்டாயம் இருந்திருக்கவேண்டும்.
குயின்ஸ் ரவர் ஆரம்பத்தில் ஒல்லாந்தரால் சுண்ணாம்பு அல்லது முருகைக்கல்லால் கட்டப்பட்டு> குவிந்தா என அழைக்கப்பட்டது. குவிந்தா என்றால் ஒல்லாந்து மொழியில் நல்வரவு என்ற அர்த்தம் கொள்ளப்படுகிறது. இதனால்தான் நெடுந்தீவு மக்கள் இவ்வெளிச்சவீட்டையும் இது காணப்படும் பகுதியையும் குவிந்தா என அழைக்கப்பட்டு வருவதனைக் காணலாம். ஒல்;லாந்தரின் ஆட்சியின் பின்னர் வருகைதந்த பிரித்தானியரால் இவ் வெளிச்சவீடு மீண்டும் திருத்தப்பட்டு குயின்ஸ் ரவர் எனப் பெயர் கொண்டழைக்கப்பட்டது. அத்துடன் ஆங்கிலேயர் தமது கொடியை இதன்மேலே பறக்கவிட்டனரெனவும் இதனால் இங்குள்ள சுதேசிகளுக்கும் ஆங்கிலேயருக்குமிடையே முரண்பாடுகளும் தோன்றின என்ற வரலாறும் காணப்படுகிறது.
குவிந்தா பரந்த வெளியில் பகல் நேரத்தில் வெள்ளை நிறமாகக் காணப்பட்டதனால் பரந்த கடற்பரப்பில் தொலைதூரத்தில் வருகின்ற கப்பல்களுக்கு வழிகாட்டியாகவும்  விளங்கியது. ஆங்கிலேயராட்சியில் இங்கு பல கப்பல்கள் பருவக்காற்றுக்களைப் பயன்படுத்தி ஒதுங்குவதற்கும் பயணத்தைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. இவ்வெளிச்சவீட்டின் முக்கிய அம்சம் அல்லது தொழில்நுட்பம் என்னவெனில் அதன் அடிப்பாகத்திலிருந்து நுனிப்பகுதி வரை நடுவில் பெரியதுளை காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் இவ்வெளிச்சவீட்டின் அடிப்பகுதியில் தீ மூட்டி  அமுக்கவிசையின் காரணமாக துளை வழியாக புகை வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இதனை இன்றும் இவ்வெளிச்சவீட்டின் உட்பகுதியில் படிந்துள்ள புகைப்படிவுகள் சான்றுபகர்கின்றது. அத்துடன் இங்குள்ள துளை வழியாக  கடதாசி போன்ற பாரம்குறைந்த பொருட்களை வீசும்போது அவை காற்றழுத்த அமுக்கவிசையின் காரணமாக குயின்ஸ் ரவரின் மேலே இழுத்துச் செல்லப்படுவதையும் காணலாம். குவிந்தாவை ஒத்ததன்மையிலே பூநகரி வெளிச்சவீடும்> இன்று எஞ்சியுள்ள புங்குடுதீவு வெளிச்ச வீட்டின் அடித்தளமும் காணப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)