புறாக்கூடு

நெடுந்தீவில் ஒல்லாந்தரது ஆட்சியைச் சிறப்பாக அடையாளப்படுத்தும் ஐரோப்பியர்கால மரபுரிமைச்சின்னங்களில் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது பறவைகள் சரணாலயம் எனப்படும் புறாக்கூடு ஆகும். இவ்வமைப்பானது ஒல்லாந்தராட்சி நடைபெற்ற இலங்கையில் அவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்டட அமைப்புக்களில் நெடுந்தீவைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தான் ஒல்லாந்தர்களின் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த மையங்களில் நெடுந்தீவானது நிர்வாகம், இராணுவக்கட்டமைப்பு போன்ற விடயங்களைப் பற்றி ஏனைய பிரதேசங்ககளுடன் தொடர்பு கொள்வதற்கான மையமாக இது விளங்கியதென்பதனையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அந்தவகையில் இப்புறாக்கூடானது நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதான கட்டடத்துக்குத் தெற்கே மிகக்கிட்டிய தொலைவில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் குறிப்பாக கி.பி 1602 தொடக்கம் கி.பி 1796 இற்கிடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. இது கூழாங்கற்களையும், முருகைக்கல்லையும், சுதையையும், மரத்தையும் பயன்படுத்தி அமைக்கப்பட்டவையாகும். இக்கூடு காணப...